Skip to main content

திருமணத்தை மீறிய உறவு! பெண்ணை கொன்றவருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Court verdict life sentence to 45 years old man

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலைக்கு பெங்களூரு சென்று, அங்குள்ள சாம்ராஜ் நகர் பகுதியில் வேலை செய்து பிழைத்து வந்தார். அப்போது ஸ்வேதா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்து அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது அவர்கள் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு ஸ்வேதாவை தனது சொந்த ஊருக்கு சுபாஷ் அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் கணவன் மனைவி போல ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

 

அவர்கள் இருவருக்கும் இரவு நேரங்களில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இரவு இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த சுபாஷ், அருகில் இருந்த உருட்டுக்கட்டை எடுத்து ஸ்வேதா தலையில் அடித்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே ஸ்வேதா உயிரிழந்தார். இதுதொடர்பாக அந்த கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷை கைது செய்தனர்.

 

இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில் ஸ்வேதாவை கொலை செய்த குற்றத்திற்காக சுபாஷுக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுபாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.