கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்தி ஆராய்ச்சி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புகழ் பெற்ற சோழ மன்னனின் சமாதி கேட்பாரற்று சேர்ந்து சிதைந்து கிடைப்பதாகவும் எனவே அப்பகுதியைச் சுற்றி அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொண்டால் சோழர் கால சான்றுகள் கிடைக்கும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான முழுமையான ஆதாரங்கள் இல்லை என்றும், தொல்லியல்துறை தரப்பில் ஆய்வு மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தொல்லியல்துறை உயர் மட்டக் குழுவினர் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.