Skip to main content

சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்; ‘அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?’ - எச். ராஜா விளக்கம்!

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
The court imposed a prison sentence What's the next step H. raja explained

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்து வருபவர் எச். ராஜா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலை பெரியார் சிலை உடைப்பேன் என எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற  நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் நீதிபதி இன்று (02.12.2024) தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “இந்த இரண்டு வழக்குகளிலும் எச். ராஜா குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” எனப் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து எச். ராஜா தரப்பு நீதிபதியிடம், “இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.  எனவே கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் அளித்து ஹெச்.ராஜாவின் தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் உடனடியாக செலுத்தப்பட்டது.

இந்நிலையில் எச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவும், சித்தாந்த ரீதியாக எதிராக வழக்குகள் தொடரப்படுவதைப் பார்த்திருக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பை 31ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுத்துள்ளார்கள். அதற்குள் மேல் முறையீடு செய்யப்படும். வழக்கறிஞர்கள் சட்டத்திற்கான போராட்டங்களை நடத்துவார்கள். அரசியல் ரீதியான திராவிடியன் ஸ்டாக்குகளுக்கு (Dravidian stock) எதிரான சண்டை தொடரும். இந்த மன நிலையில் எந்த மாற்றமுமில்லை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்