கரூர் மாவட்டம், அரசு காலணி பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தினசரி அதிகாலையில் வீடுவீடாக செய்தித்தாள் போடும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது மின்னாம்பள்ளி பகுதியில் நர்மதா (22) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரியவந்ததை அடுத்து இருவரும் சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிச் சென்று, ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பெண் வீட்டாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இருவரும் கரூர் மாநகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அன்பரசன் மற்றும் நர்மதா ஆகியோரின் பெற்றோர்களை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெண்ணிடம் அவரது உறவினர்கள் பேசினர். இந்நிலையில், அன்பரசன், பெண்ணிடம் பெண் உறவினர்கள் அதிக நேரம் பேசி வருவதாகக் கூறி காவல்நிலையம் வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறி உறுதி அளித்ததை அடுத்து தர்ணாவைக் கைவிட்டார். பின்னர் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர். இதனால் கரூர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.