Skip to main content

விபத்தில் உயிரிழந்த தம்பதி.. டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை..

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

Couple passes away in accident .. Driver arrested and interrogated ..

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி சரஸ்வதி (46). கணவன், மனைவி இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான தலைவாசல் காய்கறி சந்தைக்குச் சென்று, காய்கறிகளை வாங்கி வந்து, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். 

 

இவர்கள் தங்களுக்கு சொந்தமான ஆட்டோவில் விளம்பாவூரிலிருந்து நேற்று (06.09.2021) காலை 6 மணிக்கு காய்கறி வாங்குவதற்காக தலைவாசல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஆட்டோவை பெரியசாமி ஓட்டிச் சென்றுள்ளார். அந்த ஆட்டோ சின்னசேலம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரில் கரூரிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. 

 

இதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவி சரஸ்வதியை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சரஸ்வதியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். பெரியசாமியின் மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, லாரி டிரைவர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.