இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி இன்னும் இறுதி கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களான கயனேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இன்று (27.05.2024) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், இணைத்தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியும் முதன்மைச் செயலாளருமான சத்யபிரத சாகு, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.