/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_193.jpg)
மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தொல்லியல் அதிகாரி அமர்நாத்தை தீடிரென இடமாற்றம் செய்துள்ளது அதை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை வைத்துள்ள தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் மருத்துவர் த. அறம், தலைவர் எஸ்.கே. கங்கா, பொருளாளர் ப.பா.ரமணி ஆகியோர் விடுத்துள்ள கூட்ட அறிக்கையை பொதுச்செயலாளர் த. அறம் வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது. “மத்தியத் தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலயப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பதவிக்காலம் முடியும் முன்பே டெல்லிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பொதுவாக தொல்லியல் துறையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட இட மாறுதல் செய்யப்படும். ஆனால், இரண்டு ஆண்டுகள் முடியும் முன்பே அமர்நாத் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த அதிரடி இட மாற்றத்திற்கான எந்தக் காரணத்தையும் தொல்லியல் துறை தெரிவிக்கவில்லை.
2015ல் மத்தியத் தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வுப் பிரிவுக் கண்காணிப்பாளராக இருந்தபோது அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வுக்கான அனுமதியை வழங்கினார். இந்தக் கீழடி ஆய்வு இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதை உலகமே நன்கறியும். இந்த ஆய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அற்புதமான நகர நாகரிகம் கீழடியில் தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்ற பேருண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.
மத்திய தொல்லியல் துறையில் ஒரு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அது நிறைவுறும் முன்பே, அதன் பொறுப்பு அதிகாரியை மாற்றுவது மரபு இல்லை. இந்த மரபை மீறி, கீழடி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தாலேயே, அந்த அகழ்வாய்வுப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே, அவசரகதியில் அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும், கீழடி ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மை. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்தான் மீண்டும் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன என்பதும், கீழடி ஆய்வு அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பிறகே வெளியிடப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. எனவே கீழடி ஆய்வில் ஒன்றிய அரசு பாரபட்சமான அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
2021 அக்டோபரில்சென்னையில் உள்ள மத்தியத் தொல்லியல் துறையின் ஆலயப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் கீழடி அகழ்வாய்வு குறித்த அறிக்கையைத் தயாரித்து மத்தியத் தொல்லியல் துறைக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கினார். வழக்கம் போலவே மத்தியத் தொல்லியல் துறை அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள், கட்டிடக்கலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து உண்மையான வரலாற்றை வெளியிடும் வகையில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் அமர்நாத் கோரி இருந்தார்.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை இம்மாதம் 6 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் பிராதனக் கோயில்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்தது. இவ்வாறு கீழடி ஆய்விலும், தமிழ்நாட்டு கோவில்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதிகாரியான அமர்நாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஓர் அறிவியல் துறையாகச் செயல்பட வேண்டிய தொல்லியல் துறையில் ஒன்றிய அரசின் தூண்டுதலால், மத்தியத் தொல்லியல் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அமர்நாத்தை இடமாற்றம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
எனவே பதவிக்கால முடியும் முன்பே அநீதியாக செய்யப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை மத்தியத் தொல்லியல் துறை உடனடியாகத் திரும்பப் பெற்று மீண்டும் அதே பணியிடத்தில் அவரைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தொல்லியல் துறை ஓர் அறிவியல் துறை என்பதைக் கருத்தில் கொண்டு, அத்துறை நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து அரசியல் பண்ணும் போக்கினை ஒன்றிய பாஜக மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)