மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு தேவையானதை கேட்டுப்பெற மாநில அரசுகளுக்கு 100 சதவிகிதம் உரிமை உண்டு என சசிகலா கூறியுள்ளார்.
சென்னையில் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் என்பது வேறு. அரசாங்கம் என்பது வேறு. இப்பொழுது ஒரு அரசாங்கம் இந்தியாவில் உள்ளது. மத்தியில் ஏதேனும் ஒரு ஆட்சிதான் இருக்க முடியும். அப்படி இருக்கும் போது அனைத்து மாநிலங்களும் வரி கட்டுகிறது. நாமும் வரி கட்டுகிறோம். எனவே நமக்கு தேவையானதை கேட்டு பெறுவதற்கு 100 சதவீதம் உரிமை உண்டு. என்னை பொறுத்த வரை எங்கள் தலைவர்களின் வழியும் அது தான். நாம் இங்கு அரசாங்கம் நடத்துகிறோம் அப்படியானால் நமக்கு வேண்டியதை கேட்டு தான் பெற வேண்டும். அந்த முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை நாம் நேர்மறையாக எடுத்து மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். ஏனெனில் நம்மை முழுமையாக மக்கள் நம்பி ஓட்டு போட்டுள்ளனர். இந்த அரசாங்கத்திற்கும் நான் அதை தான் சொல்லுவேன்.
எப்பொழுதும் நாம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றோம். சண்டை போடுவதற்காக யாரும் வாக்களிக்கவில்லை. மக்களை பொறுத்த வரை அவர்களின் தேவையை நாம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கையில் தான் ஒரு கட்சிக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை கொடுக்கின்றனர். அப்படி இருக்கையில் அதை நல்ல முறையில் பயன்படுத்தி நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு. நான் நிர்வாகத்தைத்தான் குறை சொல்லுவேன். இதெல்லாம் ஜெயலலிதா இருக்கும் போது நடக்குமா. நடக்க விடுவாரா. தமிழக காவல்துறையை பொறுத்த வரை நல்ல அதிகாரிகள் உள்ளனர். இல்லாமல் இல்லை. இதை அரசாங்கம் சரியாக கவனித்து செயல்படுத்தனும்” எனக் கூறினார்.