Corporation schools in bad condition !; Salem mayor

Advertisment

சேலம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, ஆய்வகம், நூலகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி கல்வி நிலைக்குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில், வியாழக்கிழமை (ஜூலை 14) நடந்தது. மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 51 துவக்கப் பள்ளிகள், 29 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள், 7 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள், கணினி உபகரணங்கள், ஆய்வகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

இப்பணிகளை மாநகராட்சி நிதி மட்டுமின்றி பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, என்.ஜி.ஓக்களின் நிதியுதவி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ராமசந்திரன் கூறுகையில், ''சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான பள்ளிகளில் கட்டடம், கழிப்பறை, நூலகம், சுற்றுச்சுவர், ஆய்வக வசதிகள் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளன. பிரச்சனைகள் உள்ள பள்ளிகளில் உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, புதுப்பொலிவு மிக்க பள்ளியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர பொறியாளர் ரவி, கல்வி நிலைக்குழுத் தலைவர் முருகன், குழு உறுப்பினர்கள் நா.பழனிசாமி, பி.எல்.பழனிசாமி, செயற்பொறியாளர் லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.