சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 810 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேருக்கும் கரோனா அறிகுறி இல்லை. நான்கு பேரையும் தனி வார்டில் வைத்து பரிசோதனை செய்ததில் கரோனா அறிகுறி இல்லை என உறுதி. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை." இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.