




மதுரை பைபாஸ் சாலையோரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் காய்கறி வாரச்சந்தை நடைபெறும். இன்றும் அப்படித்தான் சந்தை போடுவதற்கு வியாபாரிகள் ஆட்டோக்களிலும் வேன்களிலும் காய்கறிகளோடு வந்தனர். கரோனா பரவலைக் காரணம் காட்டி போலீஸ் அதிகாரிகள் அவர்களைச் சந்தை போடவிடாமல் தடுத்தனர். வியாபாரிகளோ, விலைகொடுத்து வாங்கி வந்த காய்கறிகளை நாங்கள் என்ன செய்வது? சந்தையில் விற்கமுடியாவிட்டால் அத்தனை காய்கறிகளும் அழுகிப்போய்விடும் என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கை என்று முன்கூட்டியே சொல்லியிருந்தால், மார்க்கெட்டில் நாங்கள் காய்கறிகள் வாங்கியிருக்கமாட்டோமே என்று அழாத குறையாக முறையிட்டனர்.
போலீஸ் அதிகாரிகளோடு மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு, “வாரச்சந்தை என்றால் காய்கறிகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள். மக்கள் கூட்டம் சேர்வதை அனுமதிக்க முடியாது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகவும் மக்களைப் பாதுகாப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கை. வியாபாரிகளான உங்கள் நலனையும் கருத்தில்கொண்டுதான் செயல்படுகிறோம்.” என்று விளக்கினார்கள். வியாபாரிகளோ சமாதானம் ஆகாமல் அங்கங்கே கூடி நின்று, அடுத்து என்ன செய்வது என்று தங்களுக்குள் விவாதித்தபடி இருந்தனர்.

காய்கறி வியாபாரி ராஜா நம்மிடம் “கரோனா வந்து சாகிறோமோ இல்லியோ, கரோனா கரோனா-ன்னு சொல்லிச்சொல்லியே சாகடிக்கிறாங்க. ரொம்ப கொடுமையா இருக்கு.” என்று புலம்பினார்.
கரோனா, ஒட்டுமொத்த உலகத்தையும் புலம்ப வைத்திருக்கிறது.