CORONAVIRUS PREVENTION PEOPLES GREATER CHENNAI CORPORATION

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (06/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாகத் தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 09/04/2021 முதல் இதுநாள் வரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 5,907 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 29,096 தனிநபர்களிடமிருந்தும் ரூபாய் 318 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 1,426 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 31 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூபாய் 1,29,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

எனவே, பொதுமக்கள் வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போதும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போதும் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் உணவு அருந்தும்போது சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். மேலும், மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.