Skip to main content

கரோனா பாதிப்பு அதிகரிப்பு - மதுக்கடைகளை மூட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

hjk

 

இந்தியா முழுவதும் கரோனா மூன்றாம் அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு ஒருபுறம் மிரட்டுவதால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழகத்தில் இந்த விடியா அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதை, அ.தி.மு.க. சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை இந்த விடியா அரசு வெளியிட்டது. ஆனால், இந்தச் சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர். அம்மாவின் அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த 2021, பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

2020-ம் ஆண்டு மே மாத முதல் வாரத்தில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்தக் காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய இந்த விடியா அரசின் முதல் அமைச்சராக இருக்கும் ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறந்திருப்பதால்தான் கரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.  மேலும், ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், இன்றைக்கு இந்த விடியா திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

 

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிய கொரோனா நோய்த் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து 9 நபர்களுக்குப் பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன. இதை மா. சுப்பிரமணியனும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்த விடியா தி.மு.க. அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.