உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அரசு அதையே வலியுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கரோனாவால் பாதிக்கப்படவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 15ஆம் தேதி மோகனூரில் இவர் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கையாக இதை அவர் செய்துள்ளார்.