உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. இதுவரை நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மஹாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரையும் சேர்த்து கரோனாவுக்கு இதுவரை இந்தியாவில் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காக்கும் நடவடிக்கையாக கூட்டமாக மக்களை கூட வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக கல்வி நிலையங்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, கூட்டம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகளையும் மூடிவிட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் குளித்து, தன் சுத்தத்தைப் பராமரிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகள் உள்பட 138 சிறைச்சாலைகள் உள்ளன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், துளசி, வேப்பிலை கலந்து தயாரிக்கப்பட்ட சோப்புகள் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ அறிவுறுத்தி இருக்கிறோம். அதற்கான வசதிகளை எல்லா சிறைச்சாலைகளிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் குளிக்கவும், மருத்துவ பரிசோதனைக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வதை தவிர்க்கும்படி சொல்லி இருக்கிறோம். சிறைக்காவலர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றனர்.