Skip to main content

கரோனா ஊரடங்கால் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து... தூய்மைப்பணியாளர்களை கௌரவித்த திருநங்கைகள்!

Published on 28/04/2021 | Edited on 29/04/2021

 

Corona Uratangal Koottandavar Temple Festival Canceled .

 

கரோனா ஊரடங்கால் கடந்த இரு வருடங்களாக திருநங்கைகள் பங்கேற்கும் கூவாகம் கூத்தாண்வர் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் இணைந்து கூத்தாண்டவரை வழிபட்டு கூத்தாண்டவர் கரோனா கிருமிகளை அழித்து உலக மக்களை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதுடன், தங்கள் உயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க ஊரை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களை கௌரவித்து ஆசி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

பட்டுக்கோட்டையில் தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் கூத்தாண்டவருக்கு வழிபாடு நடத்திய திருநங்கைகள் தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க மாலைகள் அணிந்து கரகம் தூக்கி நகரில் சில வீதிகளை சுற்ற வந்து பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்கள். தொடர்ந்து கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடப்பது போல சில திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்து கதறி அழுதனர். துக்க வீடுகளில் நடப்பது போல ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதனர். இதுபோன்ற நிகழ்வை முதல்முறையாகப் பார்த்த பட்டுக்கோட்டை நகர மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். 

 

Corona Uratangal Koottandavar Temple Festival Canceled .

 

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம் வைத்து கொடுத்து தூய்மைப் பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று ஆசியும் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது. இந்த நிகழ்வுகளுப்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய திருநங்கைகள் கூறும்போது, ''கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு வருடங்களாக கூவாகம் செல்ல தடைவிதக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து கூத்தாண்டவரை தரிசிக்க திருநங்கைகள் வரமுடியவில்லை. ஆனால் அவர்கள் வசிக்கும் இடங்களில் கூத்தாண்டவரை வழிபடுகிறார்கள். சக்திமிக்க கூத்தாண்டவர் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கரோனாவை அழித்து உலக மக்களை காப்பாற்றுவார். அதற்காக நாங்கள் கூத்தாண்டவரிடம் கேட்டுக்கொண்டோம்'' என்றனர்.

 

Corona Uratangal Koottandavar Temple Festival Canceled .

 

திருநங்கைகளின் கௌரவத்தை ஏற்றுக் கொண்ட தூய்மைப்பணியாளர்கள் கூறும்போது, ''நாட்டு மக்கள் நோயால் அவதிப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் தூய்மைப்பணி செய்கிறோம். எங்களை எவ்வளவோ பேர் பாராட்டுகிறார்கள். ஆனால் இப்போது திருநங்கைகள் எங்களை கௌரவப்படுத்தியது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்றனர் நெகிழ்ச்சியாக'' திருநங்கைகளின் இந்த செயலை பட்டுக்கோட்டை நகர மக்கள் பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The brutality of a transgender who worked in IT; Terrible in Chennai

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.