கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பள்ளிகளில் கரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நான்காவதாக நேற்று முன்தினம் (18.03.2021) காலை தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் தஞ்சை சாஸ்தா பல்கலை மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் பள்ளிக்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 142 பேரில் 66 பேர் குணமடைந்து விட்டனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 76 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். தஞ்சையில் மட்டும் இதுவரை 11 பள்ளிகளில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக தஞ்சையில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பள்ளிக்கு 12,000 ரூபாயும், மாக்ஸ்வெல் பள்ளிக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதித்துள்ளார் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.