திருச்சியில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் திருச்சியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு வருகிறார்கள். சுகாதாரத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தாலும் பொதுமக்கள் பின்பற்றாத காரணத்தினால் நோய் தொற்று கட்டுக்கடங்காமல் பரவுகிறது.
திருச்சியில் வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. வெற்றிலைகாரத் தெருவை சேர்ந்தவர் மாப்பிள்ளை. சின்ன செட்டி தெருவை சேர்ந்தவர் மணப்பெண். இருவரது நிச்சயதார்த்த விழாவிற்கு பல்வேறு நபர்கள் பங்கேற்றார்கள். பெரும்பாலும் இச்சமூகத்தினர் நகை மற்றும் வைர வியாபாரம் செய்து வருபவர்கள். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு திருச்சி, மதுரை, பரமக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து குடும்ப விழாவிற்கு குடும்ப சகிதமாக வந்திருந்தனர். நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளை, பெற்றோர்களுக்கும் பெண் வீட்டாரிடமும் கரோனா அறிகுறியுடன் திருச்சி காவிரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோர் பலர் நோய் தொற்று பரிசோதனை செய்து அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பலருக்கு பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். நோய்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று உறுதியான பகுதியில் தடுப்புகள் அமைத்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கடைகளை அடைக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் நோய் தொற்று உள்ளவர்கள் கடை அடைக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான முக்கிய கடைவீதி பகுதியில் குடும்ப விழாவில் உருவான கரோனா அப்பகுதியினரிடமும், உறவினர்களிடமும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்தாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக் காலகட்டத்தில் கட்டுக்கடங்காமல் கரோனா பரவிவருகிறது. புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அரசு பல்வேறு தளர்வுகளை அளித்திருந்தாலும் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செல்வதால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சியில் டைமண்ட் பஜார், காந்தி தெரு, தக்கார் சத்திரம், சின்ன செட்டி தெரு, குஜிலி தெரு, பெரிய செட்டி தெரு, வெற்றிலைக்கார வீதி உட்பட 18 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவிவருகிறது. இதனால் தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் கலக்கத்தில் இருக்கின்றார்கள். தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள் தொடர்பு உள்ளவர்களிடம் விசாரணை தொடர்ந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருமண நிச்சயதார்த்தம், பிறந்த நாள் போன்ற குடும்ப விழாக்கள் மூலம் திருச்சியில் கரோனா வைரஸ் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருவது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்து சென்றதும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது சுமார் 20 நபர்கள் குடும்ப விழாவில் பங்கேற்றவர்கள் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்றுள்ளவர்களுக்கு வீட்டு சமையல் வழங்கி வருகிறார்கள். திருச்சி முக்கியமான வைர வியாபாரியின் குடும்பத்தில் கரோனா தொற்று பரவியதால் திருச்சியில் வைர வியாபாரிகள் சங்கம் வரும் 30-ஆம் தேதி வரை கடைகளை அடைப்பது என்று முடிவுவெடுத்துள்ளார்கள்.