நாடு முழுவதும் 19 மாநிலங்களில் கரோனா என்பது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1000-ஐ நெருங்கும் வகையில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் 395 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 107 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (18.03.2021) காலை தெரிவித்திருந்தார். சென்னையில் சராசரியாக 350க்கும் மேல் கரோனா பாதிப்பு இருப்பதால், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க ஆர்.சி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த, சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி பணிகளை விரிவுபடுத்தவும் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.