கரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சுவாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று காலை முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி காலை முதல் கோயிலுக்கு வரும் நபர்களின் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போடாதவர்களும், முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் சில பக்தர்கள் வருத்தத்துடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய சம்பவங்களும் நடைபெற்றது. மேலும் சிலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட கோயிலில் இருந்து நேராக அரசு மருத்துவமனைக்கு சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.