சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கோல்டன் ஜூப்ளி விடுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர். இவர்கள் தங்கியுள்ள விடுதியில் சுடுதண்ணீர் வசதி இல்லை. இருபாலருக்கும் ஒரே கழிவறைகள்.
இதில், 100க்கும் மேற்பட்ட கழிவறைகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் விடுதியில், நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் சமூக இடைவெளி இல்லாமல் தங்கி இருக்கின்றனர். இதனால், விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என 400-க்கும் மேற்பட்ட கரோனா தொற்று நோயாளிகள் திடீரென திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்ட உணவைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சிதம்பரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது செவ்வாய்க்கிழமை முதல் இந்த விடுதியில் தங்கியுள்ள பெண் நோயாளிகளை தனியாக ஒரு இடத்தில் தங்க வைப்பதாகவும், இனிமேல் கோல்டன் ஜூப்ளி விடுதியில் புதிய கரோனா நோயாளிகளை அனுமதிப்பது இல்லை எனவும் உறுதி கூறினார்கள். மேலும் விடுதியில் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாகவும் உறுதி கூறினார்கள். இதனைத் தொடர்ந்து விடுதியில் தங்கியுள்ள நோயாளிகள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர். கோல்டன் ஜூப்ளி விடுதியில் கரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.