Corona infected policemen vaccinated twice ..!

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வைரஸ் தொற்று பரவியது. முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் உட்பட பலரும் பாதிப்புக்குள்ளானார்கள். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது.

Advertisment

அதேவேளையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 68 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. உள்பட 7 போலீசாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், மூன்று சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 15 ஏட்டுகள், 10 முதன்மை காவலர்கள், 2 போலீசார் என மொத்தம் 33 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவராக பணிபுரியும் செல்வம் என்பவருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செல்வத்திற்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏட்டு ரமேஷ் சந்திரன், பெண் தலைமை காவலர் சகுந்தலா, முதல்நிலை பெண் காவலர் உதயகுமாரி, தனிப் பிரிவு தலைமை காவலர் மெய்யழகன், காவலர் சிவகுமார் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் அங்கு கிருமி நாசினி தெளித்தனர். தொற்று பாதிப்பு ஏற்பட்ட போலீசார்களில் ஒரு சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தடுப்பூசி செலுத்திய பின்பும் கரோனா வர வாய்ப்புள்ளது. அதனால், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. அதுமட்டுமின்றி, கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்று ஏற்பட்டாலும் மரணத்திலிருந்து காப்பாற்றலாம் என்றும் அரசு தெரிவித்துவருகிறது.