அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது நக்கம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பாசனை ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் மழைக்காலங்களில் நீர் பிடிக்கப்பட்டு பாசனத்திற்குத் திறந்து விடப்படும். பிறகு ஏப்ரல், மே மாதங்களில் ஏரி தண்ணீர் குறைந்து விடும். அப்போது ஏரியில் மீன்கள் நிறைய வளர்ந்து இருக்கும் அந்த மீன்களைப் பிடிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் இந்த ஏரியில் மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும் அரசின் 144 தடை உத்தரவின் காரணமாகவும் மீன்பிடித் திருவிழா நடத்துவது தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த மூன்றாம் தேதி நக்கம்பாடி, செந்துறை, சொக்கநாதபுரம், வஞ்சனபுரம், நல்ல நாயகபுறம், நம்ம குணம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் நக்கம்பாடி ஏரியில் அரசு அனுமதியின்றி இறங்கி மீன்பிடித் திருவிழா நடத்தினார்கள்.
இந்தத் தகவல் செந்துறை காவல்நிலையத்திற்குத் தெரிய வந்ததும் உடனடியாக போலீஸார் நக்கம்பாடி ஏரிக்கு விரைந்து சென்றனர். மீன்பிடிக்க ஏரிக்குள் குவிந்திருந்த மக்களைக் கலைந்து போகும்படி எச்சரித்தனர். அரசு 144தடை விதித்துள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இப்படிக் கும்பல் கூடுவது சட்டப்படி தவறு என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி மக்கள் மீன்பிடிப்பதில் தீவிரமாக இருந்தனர். போலீசார் அந்த மக்களிடம் கடுமை காட்டி ஏறியைவிட்டு வெளியேற்றினர்.
நக்கம்பாடி ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவதைக் கேள்ளிப்பட்டு அக்கம் பக்க கிராம மக்கள் மீன் பிடிப்பதற்காக வந்தனர்.போலீசார் அனைவரையும் தடுத்துத் திருப்பி அனுப்பி வைத்தனர். இருந்தும் அன்று மாலை நக்கம்பாடி சிவன் கோவில் குளத்தில் அந்த ஊர் மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்தியுள்ளனர்.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தபடியே உள்ளது. மேலும் செந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏற்கனவே கரோனா தொற்று ஏற்பட்டு பலர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். அதன் பிறகு சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் பல்வேறு கிராமங்களில் கரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி இப்பகுதியில் மேலும் நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக அரசு அதிகாரிகளும், காவல்துறை, சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில் மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அலட்சியப்போக்குடன் மீன் பிடிப்பது அதிகாரிகள் மத்தியில் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.