கரேனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி மக்கள் வெளியில் நடமாடிக் கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான வழக்குகள், வாகன பறிமுதல், நூதன தண்டனைகள் என நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி, உணவுக்கு வழியின்றி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
ஓவியர்களின் வாழ்க்கை சிறக்கவில்லை என்பதாலும், பல வருடங்களாக தங்களுக்கான வேலைகள் கிடைக்கவில்லை என்றும் மாற்று வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் கரோனாவுக்காக தங்களாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று சாலைகளில் விழிப்புணர்வு ஓவியங்களை வரையத் தொடங்கி, மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான் ஆலங்குடி வட்டார ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான ஓவியங்களை வரைந்து மக்களை கவர்ந்து இழுத்து வருகின்றனர்.
இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில், பிரமாண்ட சிவன் சிலையும், தலைமை புலவர் நக்கீரர் சிலையும் அமைந்துள்ள கீரமங்கலத்தின் சாலையில் ஓவியம் வரைந்தனர். எந்த ஒரு பிரச்சனைக்கும் கீரமங்கலம் சிவன் சிலை முன்பு உள்ள நக்கீரர் சிலையிடம் கோரிக்கை மனு கொடுத்தால் தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில்தான் ஓவியர்கள் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்படும் தீயில் கரோனா வைரஸ் கருகி அழிவதை போன்ற ஓவியம் வரைந்து முடித்தனர். இதனைப் பார்த்த பலரும் ஓவியர்களை பாராட்டி, ஊருக்கு ஏற்ப ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்கள்.
தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ், ஐ.ஓ.பி வங்கி மேலாளர் மற்றும் பலர், ஓவியர்களை பாராட்டினார்கள். தொடர்ந்து எங்கள் பணி தொடரும் என்று அடுத்த கிராமம் நோக்கி ஓவியர்கள் புறப்பட்டனர்.