Skip to main content

விபத்துகளை தடுக்க சாலையில் வர்ணம் பூசிய போலீசார்! பொதுமக்கள் பாராட்டு!!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Painted cops on the road to prevent accidents
                                                             மாதிரி படம்

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உசிலம்பட்டி சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வண்ணம் வேகத்தடைகள் மீது வர்ணம் பூசும் போலீசாரின் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்துவரும் வேளையில், நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையினருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுவருகிறது. வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலை நெடுகிலும் உள்ள வேகத்தடைகளில் பூசப்பட்ட வர்ணங்கள் அழிந்துவிட்டதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி பல விபத்துக்களை சந்தித்துவருகின்றனர்.

 

இதனையடுத்து, விருவீடு போலீசார் தங்கள் சொந்த முயற்சியில் வேகத்தடைகளை சுத்தம் செய்து, அதில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் செய்ய வேண்டிய பணிகளைப் போலீசார் முன்வந்து செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் சாலை விபத்துகளைத் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

இதுகுறித்து நாம் தமிழர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாயன் கூறும்போது, “வத்தலக்குண்டிலிருந்து விருவீடு வரையிலான சாலைகளில் பல இடங்களில் வேகத்தடைகள் மீது பூசப்பட்ட வர்ணங்கள் அழிந்து வேகத்தடை இருப்பதே தெரியவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், விருவீடு நான்குமுனை சந்திப்பு, கண்ணாபட்டி பாலம், சாந்திபுரம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க  எச்சரிக்கை விளக்கு அமைக்க  வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.