ஓமலூர் அருகே, கூட்டுறவு சங்க செயலாளர், தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாரில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக பாமகவைச் சேர்ந்த தாமரை கிருஷ்ணன் உள்ளார். இவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 19ம் தேதி ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: கடந்த 2019ம் ஆண்டு முதல் வெள்ளார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறேன். மாதேசன் என்பவர் இந்த சங்கத்தின் செயலாளராக இருக்கிறார்.
அவர் எனக்குத் தெரியாமல் பல நேரங்களில், எனது கையெழுத்தைப் போலியாக போட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். சங்கத்தில் 500 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் செலவினங்களுக்கு நிர்வாகக்குழுத் தலைவரான என்னிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மாதேசன் என் கையெழுத்துப் பெறாமலேயே தன்னிச்சையாக செலவினங்களை செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் என் கையெழுத்து இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட செலவினம் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மோசடி, போலி கையெழுத்து குற்றங்களில் ஈடுபட்ட அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.