
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நிர்வாகியை நியமிக்கக்கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய, 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா சொத்துகளின் மீது ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு உரிமை உண்டு. ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது. சட்டரீதியான விஷயங்கள் முடிந்த பிறகு ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு செல்வேன். உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார்.