மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் திருநங்கை ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருநங்கையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 25 வயதுடைய சௌமியா என்றும், குன்றத்தூரில் 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகளுடன் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது. அங்கு அவருடன் வசித்த திருநங்கைகளிடம் விசாரித்ததில் சௌமியா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
அவரது உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்ததில் இது தற்கொலை அல்ல திட்டமிட்டு அடித்து கொல்லப்பட்டார் என கண்டறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வந்தனர். பணம் வசூல் செய்து பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் சக திருநங்கைகள் சௌமியாவை அடித்து கொன்றதை தெரிந்துகொண்ட அந்த திருநங்கை குழுவின் தலைவி மகா என்பவர் அடித்துக்கொன்றதை போலீசாரிடம் எடுத்து செல்லக்கூடாது என்றால் சௌமியா குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயையும், ஆளுக்கொருவர் தலைக்கு 3000 ரூபாய் தனக்கும் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த அந்த திருநங்கைகள் காஞ்சிபுரம் குருவிமலையில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தனர். இதனை அறிந்த மகா தனது ஆட்களை அனுப்பி 9 திருநங்கைகளை இரண்டு ஆட்டோக்கள், ஒரு காரில்கடத்தி வரும்போது உத்திரமேரூரில் நடைபெற்ற வாகன சோதனையில் சிக்கினர். அப்போது பணம் பங்கிடும் தகராறில் சௌமியாவை அடித்து கொன்றதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அந்த திருநங்கைகள் 9 பேரும் மாங்காடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.