திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்தில் உள்ள அரங்கல்துருகம் பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள துருகம் காப்புக்காடுகள் வரும் கானாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஜீன் 30ந்தேதி இரவு பெய்த கனமழையால் அந்தத் தடுப்பணை உடைந்துவிட்டது. அதுப்பற்றி அந்தக் கிராம மக்கள் தங்களது ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ, பேரணாம்பட்டு தெற்கு ஒ.செ என்கிற முறையில் தி.மு.க.-வை சேர்ந்த வில்வநாதனுக்குத் தகவல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜூலை 1 ந் தேதி காலையே எம்.எல்.ஏ. வில்வநாதன் அந்தக் கிராமத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.
கானாற்றில் இறங்கி தடுப்பணை உடைந்ததை பார்வையிட்டவர், அங்கு வந்திருந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளர் சங்கர் என்பவரிடம், தன் செருப்பை எடுத்து வரச்சொன்னாராம். அவரும் எடுத்துவந்துள்ளார், இந்த வீடியோ, போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பட்டியலின சாதியைச் சேர்ந்தவரை, உயர் சாதி, எம்.எல்.ஏ என்கிற திமிரோடு செருப்பு எடுத்துவரவைத்தார் எனத் தகவல் பரவி பரபரப்பாகியுள்ளது.
திமுகவின் மா.செ, எம்.பி, எம்.எல்.ஏக்கள் எங்கு சென்றாலும் அந்தத் தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் பணியைச் செய்கின்றனர். ஆம்பூர் தொகுதியில் அந்த அணியினருடன் எம்.எல்.ஏவுக்கு முரண்பாடு ஆகியுள்ளது. இதனால் அவர்கள் வருவதில்லை. அந்த வேலையை தி.மு.க.-வின் பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள அனிதாவின் கணவரும், வெங்கடசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளருமான சங்கர் தான் செய்துவருகிறார். அவர் தான் எம்.எல்.ஏவின் செருப்பைக் கையில் எடுத்து சென்றவர். எம்.எல்.ஏ எடுத்து வரச்சொன்னாரா அல்லது இவரே எடுத்துச் சென்றாரா என்பது தெரியவில்லை என்றார்கள்.
இதுபற்றி ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பொய்யான தகவலை பரப்பராங்க. நான் யாரையும் செருப்பு எடுத்துக்கிட்டு வரச்சொல்லவில்லை" என்றார்.
செருப்பைச் சுமந்த சங்கர் நம்மிடம், "15 வருடமா அவருடன் இருக்கேன். என் மனைவி கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளரா இருக்காங்க. நான் எப்போதும் எம்.எல்.ஏவுடன் இருப்பேன். இருவரும் வேறு வேறு சாதியாக இருந்தாலும் அவர் சாதி பார்த்ததில்லை. அவர் உடைந்த தடுப்பணையை பார்வையிட காரில் இருந்து இறங்கி முன்னாடி போய்ட்டார். 25 மீட்டர் தள்ளி நான் பின்னாடி போனான். போகும்போது, ஒரு இடத்தில் எம்.எல்.ஏ.-வோட செருப்பு இருந்தது. எதுக்காக இவர் செருப்ப கழட்டி விட்டுட்டுப் போனார். சுகர் பேஷன்டான இவர் கால்ல கல்லு பட்டு காயம்மான பிரச்சனையாச்சேன்னு நான் தான் செருப்ப எடுத்துக்கிட்டு போனான். அதைப் பார்த்தவர் செருப்ப எதுக்கு தூக்கிட்டு வர்றன்னு சொல்லி என்னை சத்தம் போட்டார். இதான் நடந்தது. இது தெரியாம எனக்கு வேண்டாதவங்க யாரோ வீடியோ எடுத்து போட்டிருக்காங்க என்றார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.