Skip to main content

‘சர்ச்சையில் சிக்கிய பெண் மருத்துவர்’ - விசாரணைக்கு பின் அதிரடி நடவடிக்கை!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

‘Controversial Female Doctor’ - Action After Inquiry

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதமுத்து (33) - ராஜராஜேஸ்வரி (24) தம்பதியர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். ராஜராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 23ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து தனியார் ஸ்கேன் மையத்திற்குச் சென்று ஸ்கேன் எடுத்துள்ளனர். அப்போது வயிற்றில் உள்ள சிசு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின் அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த ஜோதிமணி என்ற பெண் மருத்துவர் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் அவரது கணவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்பணம் செலுத்தி ஒருமணி நேரத்தில் இறந்த பெண் சிசுவை வெளியே எடுத்துள்ளனர். அப்போது இந்த சிகிச்சையை மேற்கொண்டது மருத்துவர் ஜோதிமணி என தெரியவந்ததும் மருதமுத்து அதிர்ச்சியடைந்தார். உடனே இந்த சம்பவம் குறித்தும், மருத்துவர் ஜோதிமணி குறித்தும் காரத்தொழுவு பகுதி மக்கள் ஆட்சியர் வினீத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் வினீத், இச்சம்பவம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி மற்றும் உடுமலை ஆர்.டி.ஓ. கீதா ஆகியோர் விசாரிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான விசாரணை கடந்த 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், மருத்துவர் ஜோதிமணி தாராபுரத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை, நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து சென்னை மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

காந்தி குறித்து சர்ச்சை பேச்சு; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Tamil Nadu Governor RN Ravi's explanation on Controversy about Gandhi

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன. உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் இலட்சியங்களாக இருக்கின்றன. ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சிற்கு ஒரு திருப்பம் கொடுத்தன. நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன்.

1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும், செயல்முறையையும் துரிதப்படுத்தியது பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன் கடற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிகள் ஆகிய இரண்டும் நேதாஜியால் ஈர்க்கப்பட்டவை என்று நான் ஒரு கருத்தை முன்வைக்க முயற்சித்தேன். பிப்ரவரி 1946 இல் கிளர்ச்சிகள் நடந்தன, அடுத்த மாதம் மார்ச் 1946 இல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்து, தங்கள் நேர்மையை வெளிப்படுத்தவும், கிளர்ச்சியடைந்த இந்தியர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், கிளர்ச்சிகளைத் தடுக்கவும் அரசியலமைப்பு சபையை அமைத்தனர். கடற்படை மற்றும் விமானப்படை கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய தேசிய இராணுவத்தின் போர் உட்பட நேதாஜியின் புரட்சிகர நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டன. ஆகஸ்ட், 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, வலிமையை இழந்தது.

இந்தியப் பிரிவினைக்கான முஸ்லீம் லீக்கின் தீவிரமான வலியுறுத்தல் காரணமாக தேசிய சுதந்திர இயக்கத்தில் ஏற்பட்ட உள் மோதல்கள், உள் மோதல்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த காங்கிரஸ் தலைவர்களின் ஆற்றல்கள் ஆங்கிலேயர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆங்கிலேயர்கள் இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவை ஆண்டிருக்கலாம். ஆனால் நேதாஜியின் ஆயுதப் புரட்சி, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் அவை தவிடுபொடியாக்கின. நான் கூறியது முதன்மை ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகள். மகாத்மா காந்தியின் போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிய அவரை நான் அவமதிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.