சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸாக வெளியிட்ட சட்டக்கல்லூரி மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு பகுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சி.எஸ்.எஃப் வீரர்கள் தங்கி வருகின்றனர். அவர்களை புதுப்பேட்டை ஆயுதப்படை வாகன ஓட்டுநராக பணிபுரியும் நவீன்குமார் என்பவர், தினமும் உயர்நீதிமன்றம் அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் துறைமுக குடியிருப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இளைஞர்கள் சிலர் அதனைப் பயன்படுத்திக் கொண்டு ரவுடிகள் போன்று வேடமிட்டுக்கொண்டு அங்கிருந்த காவல் வாகனத்திலிருந்து இறங்கி வருவது போலவும், அங்கிருந்து காசிமேடு சென்று ஒரு கும்பலை வெட்டி கொலை செய்துவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவது போலவும் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல் வாகன ஓட்டுநர் நவீன்குமார் காவல் நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து, அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் விக்னேஷ் மற்றும் மணலி புதுநகரைச் சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து தற்பொழுது சிறையிலடைத்துள்ளனர்.
இதற்கு முன்பு டிக் டாக் புழக்கத்தில் இருந்த காலத்திலேயே இதுபோல் காவல்நிலையத்தில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்திருந்தனர். பலமுறை இது தொடர்பாக எச்சரிக்கைகள் கொடுத்தும் தற்பொழுது இன்ஸ்டா ரீல்ஸ் வரை இத்தகைய சம்பவங்கள் தொடர்கிறது.