காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பதாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதில் உடன்பாடு எட்ட முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து நேற்று முப்பதாவது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரம் போராட்ட பந்தல்கள் நள்ளிரவில் அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக ஊழியர்கள் குவியத் தொடங்கினர். ஐந்து நிமிடத்தில் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி அங்கு போராட்டம் நடைபெற்றது. அதில் சில ஊழியர்கள் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு மழையும் பொழிந்தது. ஆனாலும் கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.