கன்னியாகுமரியில் கனிமங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் தினசரி அதிகப்படியான லாரிகளில் கனிமங்கள் ஏற்றப்பட்டு லாரிகள் மூலம் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனைக் கண்டித்து சில அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மோதி ஏற்படும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. அதற்கும் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி தொடர் விபத்துகள் நடப்பதால் மார்த்தாண்டம் பாலத்தின் கீழ் கனரக வாகனங்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் இளம்பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது கனிமம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் மற்றும் அவரது தந்தை தூக்கி வீசப்பட்டனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்த நிலையில், இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் தந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரியில் தமிழக பொதுப்பணித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. உடனடியாக லாரி ஓட்டுநர் ஷிஜினை போலீசார் கைது செய்து விசாரித்ததில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறைக்கு லாரி ஓட்டுநராக இருந்துள்ளதும், ஆனால் ஒப்பந்தம் முடிந்தும் அந்த ஸ்டிக்கரை அகற்றாமல் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது.