Skip to main content

''தொகுதிப் பங்கீடு.. ஆளுநர் உரை...''-காணொளியில் முதல்வர் ஆலோசனை

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
"Constituent distribution.. Governor's speech..."- Chief Minister's advice on video

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிகாரிகள் சார்பாக நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 12ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்தும், ஆளுநர் உரை குறித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய கூறுகள் குறித்தும் இந்த காணொளி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

'விட்டால் திருப்பூரையும் மணிப்பூர் ஆகிவிடுவார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'If BJP enterTirupur will also become Manipur' - Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ,''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள்.  மோடியின் பாஜக அரசு வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியைக் கெடுத்து விடுவார்கள். அதிகாரத்தில் உள்ள பாஜக வென்றால், திருப்பூரை மணிப்பூர் ஆக்கி விடுவார்கள். பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார். சமூகநீதி என்ற வார்த்தையே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டைத்தான் காலி செய்வார். வருகின்ற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கின்ற போர். வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகின்றதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாக செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனங்களை விலைக்கு வாங்கி  பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவார்கள். உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது, அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது எனப் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு தான் இன்று ஊடகச் சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படுத்தி இருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா அவருடைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைவோடு இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் உள்ளது மோடி சொன்ன புதிய இந்தியா.

மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்களின் விலை 53 விழுக்காடு அதிகம், எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம், காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம், மருத்துவ செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம் மோடி சொன்ன வளர்ச்சியா? 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தோம் எனச் சொல்லிக் கொள்ளும் பாஜக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை. ஆனால் திராவிட மாடலாட்சியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் கஜானாவை தூர்வாரிய அதிமுகவினால் ஏற்பட்ட நிதிச் சுமை; ஒன்றிய பாஜக அரசு தரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை மீறி ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.