புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தர்ம.தங்கவேல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி.யின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. த.புஷ்பராஜ், பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். அதன் பிறகு இளைஞர்களுக்கு கட்சிப் பதவிகள் கொடுக்க வேண்டும் என்ற போது புஷ்பராஜின் சகோதரரின் மகன் தர்ம தங்கவேலுவுக்கு அந்தப் பதவியைப் பெற்றுக் கொடுத்தார். இவரும் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலின் போது, தி.மு.க. கூட்டணியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்தும், அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரானார். அதேபோல் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேலுவின் மனைவி உமா மகேஸ்வரி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அதன் பிறகு, புதுக்கோட்டையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் தொடர்ந்து இருந்து வந்தது. இந்தச் சம்பவத்தால் ப.சிதம்பரமும் தர்ம.தங்கவேலை கண்டித்ததோடு அவருடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் தான் தற்போது தர்ம.தங்கவேல் மற்றும் ஆலங்குடி நகர இளைஞர் காங்கிரஸ் ஆனந்த் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்னை சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.