Skip to main content

பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழு பேர் விடுதலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்' என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரவர்களது இடங்களில் வாயை வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயினை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சுமார் 200 மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் காங்கிரஸ் கட்சியினர் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட்டுக்கு எதிரான வழக்குகள்; உச்சநீதிமன்றம் கைவிரிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'Interim injunction cannot be imposed'- Court gives a hand in cases against neet

நீட் முறைகேடு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு; நீட் தேர்வு குளறுபடிகள்; ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்துள்ளது என இப்படி தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் விடுமுறைகால சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகளில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு குளறுபடிகள் நீட் தேர்வின் புனித தன்மையைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டதோடு நீட் தேர்வு தொடர்பான இந்த வழக்குகளின் அடுத்த விசாரணையை  ஜூலை எட்டாம் தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜரான நீட் தேர்வுக்கு எதிரான தரப்பு வழக்கறிஞர்கள் நீட் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகிய காரணங்களால் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இது சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது எனவே கவுன்சிலிங்கை நிறுத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story

கெஜ்ரிவால் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Supreme Court rejected Kejriwal's request

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் பல கட்டங்களாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் கடந்த 10.05.2024 அன்று அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு  இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தலான ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

தனது உடல்நிலையைப் பரிசோதனை செய்ய இருப்பதால் ஏழு நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது வேண்டுமானால் தலைமை நீதிபதியை நாடுங்கள் என உச்சநீதிமன்ற கோடைகால  சிறப்பு அமர்வு தெரிவித்துள்ளது.