கர்நாடகாவில் கட்சித் தாவலை தடுக்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 76 பேர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் 76 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தை புறக்கணித்த நான்கு எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் இருப்பார்கள் என்று கூறிய சித்தராமையா, தங்கள் கட்சியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள் என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு செய்ய வேண்டி இருப்பதாக குறிப்பிட்டார்.
நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட 76 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியை கவிழ்க்க பாஜக திட்டமிடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்காக எம்எல்ஏக்களுக்கு 60 கோடி வரை குதிரை பேரம் பேசப்படுவதாகவும், அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதாகவும் பாஜக ஆசை காட்டுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.
அதேபோல் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டினார். இதனால் கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லியிலுள்ள குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டதக்கது. இப்படி இருதரப்பும் மாறி மாறி தங்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக சொல்லும் குற்றசாட்டுகள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.