
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் திமுக 85 சதவீத வெற்றியும், அதிமுக 15 சதவீத வெற்றியும் பெற்றுள்ளன. வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி வார்டு உறுப்பினர்களாக, ஊராட்சி மன்ற தலைவர்களாக, ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் பதவி ஏற்றுக்கொண்டு வெளியே வந்த கவுன்சிலர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் இடையே கைகலப்பாகி, அது தள்ளுமுள்ளுவாகி, காவல்துறை தடியடி நடத்தி விரட்டியடித்துள்ளது.
ஆலங்காயம் ஒன்றியம் 18 வார்டுகளைக் கொண்டது, நடந்து முடிந்த தேர்தலில் 18 இடங்களில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேவையான கவுன்சிலர்கள் திமுகவில் உள்ளனர். இதனால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு திமுகவுக்கு சாதகமாகவே உள்ளது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் எம்.எல்.ஏ தனது மருமகள் காயத்ரி பிரபாகரனை சேர்மனாக்க முடிவு செய்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர்ஆனந்தின் ஆதரவாளர் பாரி என்பவர் தனது மனைவியான கவுன்சிலர் சங்கீதாவை சேர்மனாக்க வேண்டுமென ஆதரவு தேடினார். திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் இருவர், பாமக கவுன்சிலர் இருவர், சுயேச்சை ஒருவர் என 14 பேரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பாரி வெளிமாவட்டம் ஒன்றில் தங்கவைத்து பாதுகாத்துள்ளார்.
அக்டோபர் 20 ஆம் தேதி பதவியேற்பு நிகழ்வுக்காக ஆலங்காயம் ஒன்றியக்குழு அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார். கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டு கவுன்சிலர்கள் வெளியே வரும்போது, அதில் திமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க மா.செ. தேவராஜ் மச்சானும், ஆலங்காயம் ஒ.செவுமான அசோகன், கார்களோடு சென்றவர், தன் ஆட்களை வைத்து கவுன்சிலர்களை இழுத்துள்ளார். அதனை பாரி ஆட்கள் விடாமல் தங்கள் பக்கம் இழுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் இருதரப்பையும் விலக்கிவிட முயல, அது முடியாமல் போய் உள்ளது. இறுதியில் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் கவுன்சிலர்கள் கார்களில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது இருதரப்பும்.
திமுக பாரிக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள், பாமக கவுன்சிலர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது பல தரப்பிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, திமுக மா.செ தேவராஜ் மீதுள்ள அரசியல் ரீதியிலான பகையில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேர்மனாகக் கூடாதென முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், சிட்டிங் எம்.எல்.ஏ. சதிஷ்குமார் தரப்பு தீவிரமாக வேலை செய்கிறது. அதனால் திமுகவில் சேர்மன் போட்டி ஏற்பட வெளிப்படையாக அந்த போட்டி குரூப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றார்கள்.