Skip to main content

சேர்மன் பதவி மோதல்; ‘தீ குளிப்பேன்’ என மிரட்டும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்   

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Conflict over chairman position; Organizer of the Women's Volunteer who threatens

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றிய திமுக மகளிர் தொண்டரணியில் இருப்பவர் மஞ்சுளா. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அங்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் குடியாத்தம் ஒ.செ கல்லூர் ரவி மீது குற்றம்சாட்டி சமூக வளைத்தளங்களில் கடுமையாக கருத்து பதிவிட்டுள்ளார் மஞ்சுளா. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பக்கத்து ஊராட்சியான தாட்டிமானபல்லியிலிருந்து பக்கத்து ஊரான கல்லப்பாடியில் போட்டியிட்டேன். ஆனால், நான் போட்டியிடுவதை விரும்பாத  குடியாத்தம் முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி, ஒரு சுயேட்சை வேட்பாளரை தென்னை மர சின்னத்தில் நிற்கவைத்து தனது ஆளும் அதிகாரம் அத்தனையும் பயன்படுத்தி மிக வெளிப்படையாகவே எனக்கு எதிராக வேலை செய்து  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்னை தோற்கடித்தார். தலைவர் நல்லாட்சி, உதயசூரியன் சின்னம், பொதுமக்களின் அமோக ஆதரவு அத்தனை இருந்தும் கழகத்தின் உயர் பதவியை அனுபவித்துவரும் கல்லூர் ரவியால் நான் தோற்றுப்போய் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டுள்ளேன்.

 

கட்சிக்கு துரோகம் செய்தவர் கட்சிப்பதவியில் நீடிக்கலாமா? இதைவிட மிகப்பெரிய துரோகம் வேறு ஏதாவது இருக்கிறதா? பெண்களின் பாதுகாவலரே எனக்கொரு நீதி சொல்லுங்கள். தற்போது கழகத்தின் சார்பில் கொண்டசமுத்திரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அண்ணன்  N.E.சத்யானந்தன் தான் ஒன்றிய பெருந்தலைவர் என்று, பொதுச்செயலாளரும் வேலூர் மாவட்ட கழக செயலாளரும் வாக்குறுதி அளித்த நிலையில் தலைமையை எதிர்த்து வேறு ஒரு வேட்பாளருக்கு கல்லூர் ரவி வேலை செய்கிறார். எனவே தலைமைக் கழகத்திற்கும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கும் வேலூர் மாவட்ட கழக செயலாளருக்கும் திமுகவினருக்கும் கல்லப்பாடி மஞ்சுளா ஆகிய நான் தெரிவித்துக்கொள்வது, சத்யானந்தனை ஒன்றிய பெருந்தலைவர் வேட்பாளராக வாக்குறுதி அளித்தபடி அறிவிக்கவில்லை என்றால் நாளை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 100 பேர் முன்னிலையில் நான் தீக்குளிப்பேன். இங்ஙனம் கல்லப்பாடி மஞ்சுளா’ என்று பதிவிட்டுள்ளார். 

 

இதுகுறித்து நாம் மஞ்சுளாவிடம் கேட்டபோது, “நான் தீவிரமான கட்சி விசுவாசி, ஆக்டிவ் கள அரசியல்வாதி. அதனாலேயே என்னை கல்லூர் ரவிக்கு பிடிக்காது. நான் போட்டியிட்ட வார்டில் சுயேச்சையாக ஒருவர் போட்டியிடுகிறார். அவர் கல்லூர் ரவிக்கு வேண்டப்பட்டவர். அவருக்கு 2 கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் தருகிறார். அவரை வாபஸ் வாங்கு எனச்சொல்லியிருந்தால் வாங்கியிருப்பார், ஆனால் வாங்கச் சொல்லவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் அவருடன் கை குலுக்குகிறார். அதை வைத்துதான் சொல்கிறேன் அவருக்கு இவர் சப்போட். என்னை தோற்கடிக்க மறைமுகமாக கூட்டுவைத்துள்ளார். இப்போது அவரை திமுகவுக்கு கொண்டுவந்து துணைதலைவர் பதவி தருகிறேன் என வாக்குறுதி தந்து அழைத்துவருகிறார் இது நியாயமா” என்றார்.

 

இதுகுறித்து குடியாத்தம் திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, சேர்மன் பதவிக்காக துரைமுருகன் ஆதரவாளரான ஒ.செ கல்லூர் ரவிக்கும், மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ ஆதரவாளரான மற்றொரு ஒ.செ சத்தியானந்தத்துக்கும் இடையே மோதல் நடக்கிறது. அந்த மோதலின் வெளிப்பாடுதான் ரவியை டேமேஜ் செய்து, சத்தியானந்தத்துக்கு ஆதரவாக மஞ்சுளாவின் மிரட்டல்போல் உள்ளது என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

“பிரதமர் மோடிக்கு இது அழகல்ல” - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Minister Duraimurugan cricticizes pm modi

ஐந்தாவது முறையாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று (15-03-24) கன்னியாகுமரி பகுதி வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது. குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நாட்டை பிளவுபடுத்த நினைத்த மக்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி எடுபடாது. கொள்ளையடிப்பதை கொள்கையாகக் கொண்டது திமுக கூட்டணி. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி. திமுக - காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் நடைபெற்றது. ஹெலிகாப்டர் ஊழல் உள்பட பல்வேறு முறைகேடுகள் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழக மக்கள் காண தடை விதித்த கட்சி திமுக. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது” என்று பேசினார். பிரதமர் மோடி பேசியது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.1294 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் அளவில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த பாலத்தை திறந்து வைப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (16-03-24) வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக மற்றும் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்ததை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “பிரதமர் என்பவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், நம்முடைய மதிப்புக்குரியவர். மிகப்பெரிய ஸ்தானத்தில் இருப்பவர். அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை கூறியிருப்பது அவர் போன்ற பெரியவருக்கு அழகல்ல” என்று கூறினார். இதனையடுத்து அவரிடம், ‘தேர்தல் பத்திரம் விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்துவதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.