நாகை அருகே நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகப்பட்டினத்தில் பைபர் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம்(28/09/2024) செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். தொடர்ந்து வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. விசைப்படகு மீனவர்களுக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
செருதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பைபர் படகு மீனவர்கள் இரண்டு விசைப் படகின் மீது மோதுவது போன்ற அந்த காட்சிகள் இருந்தது. நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் படகுகளை மோத செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சமுதாயக் கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். நாகையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பேட்டை மீனவர்கள் இருபது பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் ஏற்பட்ட முதல் மோதலில் காயமடைந்த செருதூர் கிராம மீனவர்கள் கொடுத்த புகார் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.