டிக்கெட் எடுக்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பேருந்து நடத்துநர் பயணியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன்குமார் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 112 வழித்தட பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எம்.கே.பி.நகர்-கோயம்பேடு வரையிலான 46 ஜி வழித்தட பேருந்தில் நடத்துநர் இல்லாததால் தற்காலிகமாக அவர் அந்த பேருந்தில் நடத்துநர் பணிக்கு சென்றுள்ளார்.
பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது என்.எஸ்.கே பேருந்து நிறுத்தத்தில் வேலூர் மாவட்டம் மாதனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மனைவியுடன்பேருந்தில் எறியுள்ளார். கோவிந்தன் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் பயணச்சீட்டு வாங்கும்போது கோவிந்தனுக்கும் நடத்துநருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான தகராறில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதில் பேருந்து நடத்துநர் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த அமைந்தக்கரை போலீசார் ஜெகனுடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இன்று காலை 10 மணிக்கு நடத்துநரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடைபெற இருக்கிறது. அதேபோல் தாக்குதலில் ஈடுபட்ட பயணிக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த சென்னையில் நள்ளிரவில் சில மணி நேரம் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் கொலை வழக்கு; அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்; ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.