புதுக்கோட்டை மாவட்டம் - விராலிமலையிலுள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில், நேற்று (17.02.2020) அரசுக்குக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
வரும் 25.02.2021 அன்று விராலிமலையிலுள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதில், யாக சாலை, கோபுரக் கலசம், கருவறை ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தஞ்சாவூர் அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர், புதுக்கோட்டை செயல் அலுவலர் ஆகியோரிடம் நேரில் சென்று தெய்விகத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.
தெய்விகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் வே.பூ.இராமராசு, பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மூ.த.கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் நா.இராசா ரகுநாதன், இரெ.ஆனந்தன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்) ஆகியோர் இம்மனுக்களை நேரில் சென்று வழங்கினர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில் குடமுழுக்குகளிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதை முழுமையாகப் பின்பற்றி விராலிமலை சுப்பிரமணிய சாமி திருக்கோயிலிலும் தமிழில் திருக்குடமுழுக்கு நடத்த ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.