Skip to main content

பெயிண்ட் ஆலையில் தீ விபத்து சம்பவம்; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
Condolence of Tamil Nadu Chief Minister for Fire incident in paint factory

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அமைந்துள்ள சிப்காட் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் நேற்று (31-05-24) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, ‘திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், காக்களூர் கிராமத்தில் இயங்கிவரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ZEN PAINTS என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில், இந்நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த சென்னை. அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி (55) க/பெ.பக்தவச்சலம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்த  பார்த்தசாரதி (51) த/பெ. புவனேந்திரன் மற்றும் சென்னை, அம்பத்தூர். விஜயலட்சுமிபுரம். பிரகாசம் தெருவைச் சேர்ந்த புஷ்கர் (37) த/பெ.கணேசன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (37) த/பெ. இருசப்பன் என்பவர் மீது இந்நிறுவனத்தின் சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘கல்வராயன் மலைக்கு முதல்வர் சென்று ஆய்வு செய்ய வேண்டும்’ - உயர்நீதிமன்றம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Chief Minister should go to Kalvarayan Hill and inspect High Court

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி என்பவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கல்வராயன் மலையும் ஒரு பகுதியாகும். இந்த கல்வராயன் மலைப்பகுதி இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி முன்னேறாமல் உள்ளது. இது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நேர்காணலை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் பார்த்துள்ளார். இதனையடுத்து நீதிபதி  எஸ்.எம். சுப்ரமனியம் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.  இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஒரு மாத காலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமனிடம், ‘கடந்த 1991 ஆம் ஆண்டு ஆண்டு தான் கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

Chief Minister should go to Kalvarayan Hill and inspect High Court

சுதந்திரமடைந்த பிறகும் கூட கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களை இந்தியாவுடன் இணைக்காமல் தனிப்பகுதியாக இருந்து வந்தது. இது ஒரு கொடுமையான சம்பவம் ஆகும். அங்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமனியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் இன்று (24.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதிகள், “கல்வராயன் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டீர்களா. அங்கு என்ன நடக்கிறது. அரசு அதிகாரிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகளாகிய நாங்கள் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியாது.

Chief Minister should go to Kalvarayan Hill and inspect High Court

எனவே கல்வராயன் மலைப்பகுதிக்குச் சென்று மக்களின் நிலை பற்றி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய வேண்டும். முதலமைச்சர் செல்லமுடியாவிட்டால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் செல்ல வேண்டும். அவ்வாறு பார்வையிட்டால் தான்  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேசன் கடைகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை;  முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Car manufacturing plant at Ranipet;  The Chief Minister lays the foundation stone
கோப்புப்படம்

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இதற்கான தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில்  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) அடிக்கல் நாட்டவுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு ஜாகுவார், லேண்டு ரோவர் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மின்சார வாகனங்களையும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.