Skip to main content

அரசுப் பள்ளி கட்டிடம்; தண்ணீர் நிறைந்த குழிக்குள் கான்கிரீட்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Concrete inside a water filled pit to build a government school perimeter wall

 

கடந்த வாரம் தண்ணீர் குழாய்களே இல்லாமல் குடிநீர் இணைப்பு கொடுத்ததுபோல தற்போது முழங்கால் அளவு தண்ணீர் நிறைந்த குழிக்குள் அரசுப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டிட கான்கிரீட் போட்ட அவலம் நடந்தேறியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மேல மணக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பல வருட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. கடந்த வாரம் பூமி பூஜையுடன் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும் தொடங்கியது. பில்லர்கள் அமைக்க குழிகள் தோண்டப்பட்டதும் தண்ணீர் ஊற்றெடுத்தது. அடுத்தடுத்த நாளில் பில்லர் குழி தெரியாத அளவில் தண்ணீர் நிறைந்திருந்தது.

 

Concrete inside a water filled pit to build a government school perimeter wall

 

சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிக்கு வந்தபோது ஒவ்வொரு பில்லர் குழியிலும் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது. வேகமாக வந்த கட்டுமானப் பணியாளர்கள் தண்ணீர் குழிகளுக்குள் இறங்கி நின்று சிமெண்ட் கான்கிரீட் கலவைகளைக் கொட்டி மிதித்து மட்டம் செய்தனர். தண்ணீருக்குள் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பில்லர் குழியில் கான்கிரீட் போடுவதைப் பார்த்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வந்து கேட்க, அதெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே கான்கிரீட் கலவையை தண்ணீருக்குள் கொட்டியுள்ளனர். 

 

சில குழிகளுக்குள் இருந்து பக்கெட்டில் தண்ணீரை அள்ள அள்ளத் தண்ணீர் ஊறிக்கொண்டே இருந்தது. அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி தண்ணீருக்குள் பில்லர் கான்கிரீட் போட்டால் எப்படி நிற்கும். அடித்தளமே இப்படி இருந்தால் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கும்போது சுவர் நிற்குமா? மாணவர்கள் அந்தப் பக்கமாக எப்படி அச்சமின்றி போக முடியும். இதனை ஏன் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்  பெற்றோர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

முதல்வர் காட்டிய கறார்; ஓரங்கட்டப்பட்ட சீனியர் - யார் இந்த முரசொலி?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Thanjavur Parliamentary Constituency Candidate murasoli Details

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு போன்ற திமுகவின் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுமுக வேட்பாளர்கள் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மேடையில் வெளியிட்ட மு.க. ஸ்டாலின், தஞ்சையில் முரசொலி என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, 'முரசொலியே அங்கே நிற்கிறது' என அழுத்தமாக கூறினார். அப்போதே அனைவரது கவனத்தையும் புதுமுக வேட்பாளர் முரசொலி பெற்றார். இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிமுகமான முரசொலி, 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு அதில் 6 முறை எம்.பியாக தஞ்சையில் வெற்றிபெற்ற சீனியரான பழநிமாணிக்கத்தை ரேஸில் வீழ்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தொகுதி மக்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளார் புதுமுக வேட்பாளர் முரசொலி. தலைமை எப்படி அவரை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து தஞ்சை திமுகவினர் வட்டாரத்தில் பேசுகையில், பல தகவல்கள் கிடைத்தது. முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நேர்காணலில் திமுக தலைமை முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம்  மட்டும் எவ்வளவு பணம் தேர்தலுக்கு செலவு செய்வீர்கள் எனக் கேட்டு விவரம் பெற்றுள்ளனர். ஆனால், சீனியர் சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திடம் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுவே, சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது எனப் பேசுபொருளை உண்டாக்கியுள்ளது.

இப்படியிருக்கையில், முரசொலியோ தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னே தொகுதிக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏக்களை சந்தித்து சீட் கிடைத்தால் ஆதரவு வேண்டும் என ஆசி பெற்றுள்ளார். இதனால், முரசொலி தான் தஞ்சை வேட்பாளர் என திமுகவினர் பரவலாகப் பேசியுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு மீண்டும் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார். ஆனால், அவரை அழைத்துப் பேசிய திமுக தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை. கட்சி அறிவிக்கும் நபரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வெளிப்படையாக சொல்லியுள்ளது. அப்போது, இந்த ஒரு முறை மட்டும் என தஞ்சை சிட்டிங் எம்.பி. பேச்சை ஆரம்பிக்க, கட்சியின் தலைமையோ ஸ்ட்ரிக்டாக புதுமுகம் தான் இந்த முறை என சொல்லியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை புதுமுகமான முரசொலியை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாக தஞ்சாவூர் திமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி, வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் முரசொலி. திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடையது பாரம்பரியமான தி.மு.க குடும்பம். முன்பே வடக்கு ஒன்றியச் செயலாளருக்கான உள்கட்சித் தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன். அதன் பிறகு கட்சிப்பணிகளை செய்து வந்த முரசொலி, ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமரிசையாக நடத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாகப் பாராட்டினார். அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண். ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் அவருக்கு கிடைக்க வேட்பாளர் ரேஸில் வெற்றி பெற முக்கிய காரணமாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. டி.ஆர். பாலு ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் பாயிண்ட். தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த முரசொலி எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்கின்றனர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அந்த பண்பே முரசொலி சத்தமில்லாமல் சாத்தித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துரை. சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை தஞ்சையில் ஓங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதுமுகமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியில் தி.மு.க-விற்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பழநிமாணிக்கத்திற்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும், 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக வென்ற ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதும் தான் அக்கட்சியினர் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால், சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளடி வேலை செய்யக்கூடும், தொகுதிக்கு புதிய முகம் உள்ளிட்டவை முரசொலிக்கு சவாலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, முரசொலியின் ஆதரவாளர்கள் தஞ்சையில் தடபுடலாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.