Skip to main content

வாய்காலில் கான்கிரீட் தளம்...- இரு பிரிவாக மோதும் விவசாயிகள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

 Concrete floor in the drain ...! -Farmers clashing in two divisions

 

ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பெரிதும் பூர்த்தி செய்வது பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரான கீழ்பவானி வாய்க்கால் தான். சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் 5 லட்சம் மக்களின் குடிநீருக்கு ஆதாரமே இந்த வாய்க்கால் தான். கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்த அதில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ரூபாய்  710 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இந்நிலையில், அந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் அதன் இருபுறமும் உள்ள பல லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரம் பெற்று வரும் 100 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் அந்த வாய்க்கால் முடிவடையும் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வாய்க்காலை நவீனப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 Concrete floor in the drain ...! -Farmers clashing in two divisions

 

வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்ககூடாது என வலியுறுத்தி வரும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பாசனதாரர்கள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோருடன் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் 11 ந் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இரு தரப்பு விவசாய அமைப்பினரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

 

கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக அரசை பொறுத்தவரை இப்பிரச்னையில் நடுநிலையாகவே செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாய்க்காலின் மேல் பகுதி விவசாயிகள் முதல் கடைமடை விவசாயிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்காலின் தரைப்பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட மாட்டாது. கரை பலவீனமாக உள்ள பகுதிகளிலும், கரை உடைந்துள்ள பகுதிகளிலும் மட்டுமே கான்கிரீட் அமைக்கப்படும். மேலும், மதகுகள் சீரமைக்கப்படும். தேவையான இடங்களில் படித்துறைகள் அமைத்தல், வாய்க்காலின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலங்களை, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றியமைத்தல், கடைமடை வரை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

 

 Concrete floor in the drain ...! -Farmers clashing in two divisions

 

மேலும், எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலும் கீழ்பவானி பாதுகாப்பு இயக்கத்தினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் மாற்றங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என பாசனதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிக்குமாறு  கேட்டுள்ளோம்" என்றார்.

 

வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், அமைத்தால் விவசாயிகள் திரண்டு அரசுக்கு எதிராக போராடுவோம் என மற்றொரு தரப்பு விவசாய அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதால் வாய்க்கால் கான்கிரீட் தள விவகாரம் விவசாயிகளை இரு பிரிவாக மாற்றியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.