Skip to main content

உணவகங்கள், மளிகைக் கடைகளில் புகார் எண் கட்டாயம்.... உயர் நீதிமன்றம் ஆணை! 

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Complaint number mandatory in restaurants and grocery stores .... High Court order!

 

உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் கலப்படங்களைத் தடுக்க உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண்களைக் கடைக்காரர்கள் வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மனோகர் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தனது கடையில் எடுக்கப்பட்ட மல்லித்தூள் தரமற்றிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், ''வந்த புகார்களின் அடிப்படையில் நடந்த சோதனையில் கடையிலிருந்த மல்லித்தூள் தரமற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று  தெரிவிக்கப்பட்டது.

 

இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், ''ஒரு நிறுவனத்திற்கு எதிராக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் தலையிட முடியாது'' என தெரிவித்தார். மேலும், ''உணவகங்கள், மளிகைக் கடைகளில் விற்கும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய வேண்டும். உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் எண்களை இடம்பெறச் செய்வது கட்டாயம். ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது, கலப்படக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தரமற்ற உணவுப்பொருட்கள் குறித்துக் கொடுக்கப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Enforcement Department raid in Chennai

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

Enforcement Department raid in Chennai

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாபர் சாதிக் வீட்டின் சீல் அகற்றப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 

Enforcement Department raid in Chennai

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department raid in Chennai

இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல உணவகத்திற்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.