திருப்பதியில் டி.டி.எஃப்.வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் அடிக்கடி பைக் சாகசங்கள் செய்து வழக்குகளில் சிக்குபவர். ஏற்கனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்த டி.டி.எஃப்.வாசன் வெளியே வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் சென்ற டி.டி.எஃப். வாசன், மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கிய வீடியோவை யூடியூப் சேனலில் பதிவிட்டதாக புகார்கள் எழுந்தது. தொடர்ந்து மதுரை அண்ணா நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் பேரில் டி.டி.எஃப். வாசன் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பிராங்க் வீடியோ எடுத்து அதை டி.டி.எஃப். வாசன் வெளியிட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது தேவஸ்தான விஜிலென்ஸ் துறை கொடுத்த புகாரின் பேரில் டி.டி.எஃப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு போலீஸ் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.