கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
அப்போது சேமிப்புக் கிடங்கில், ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி தரம் குறைந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்டார். மேலும், “நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியதுடன் “இதுபோன்ற குறைகள் பொதுமக்களிடமிருந்து வராமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். இந்த ஆய்வின்போது தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் கெளரி ஆகியோர் உடனிருந்தனர்.