அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஜூன் மாதம் 23 ஆம் தேதி (23.06.2024) இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வானது ஜூலை 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இத்தேர்வினை எழுத 26 ஆயிரத்து 510 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனையொட்டி போட்டித் தேர்வர்கள் கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) முதல் அவர்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.
அதே சமயம் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 2 ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு இன்று (21.07.2024) நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு இந்த தேர்வு தொடங்க உள்ளது.