முதல் நாள் ஒருவர், மறு நாள் மற்றொருவர், இன்னொரு நாள் இன்னொருவர் என போட்டிப் போட்டுக் கொண்டு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்புகள், பால், தயிர், முககவசம், கிருமி நாசினிகள் வழங்கி, தங்களுடைய ஊரை பசியறியாத ஊராக்கி மனித நேயம் தழைக்க பாடுபடுகின்றனர் கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட மண்ணின் மைந்தர்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றம். 3,840 வாக்காளர்களைக் கொண்ட இந்த ஊராட்சி மன்றத்தில் கண்டரமாணிக்கம், தெற்குப்பட்டு, பொன்னாங்குடி, காணிக்காடு, வடக்குத்தெரு, அமிர்தபுரம், வலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. கரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமலில், நாடெங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்க, பெரும்பான்மையான கூலித் தொழிலாளர்களைக் கொண்ட கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றமும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இவ்வேளையில், ஊர்மக்களைக் காக்க நாங்கள் இருக்கின்றோமென கண்டரமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்டவர்கள் கைகொடுக்க பசியறியாமல் திகழ்கின்றது ஊர்.
"முதன்முதலாக கண்டரமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருப்புத்தூர் தீயணைப்பு துறை மற்றும் கோயம்புத்தூர் வாழ் கண்டரமாணிக்க நகரத்தார் உதவியுடன், கிருமிநாசினி மருந்து தெளிக்க, நாங்களும் பங்கெடுக்கின்றோமென ஏப்ரல் 6,7,8, ஆகிய தேதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிப்பிற்கான மொத்த செலவினை ஏற்றுள்ளார்கள் மதுரைவாழ் கண்டரமாணிக்க நகரத்தார்கள். அதற்கடுத்த நாட்களில் மதுரையை சேர்ந்தவர்கள் கபசுரக் குடிநீர் வழங்கிய வேளையில், ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட 1,480 ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வீதம், மொத்தம் 7 ஆயிரத்து 400 கிலோ அரிசி வழங்கினர்.
இதே வேளையில், திருநெல்வேலி, கோவை, ஈரோடு, மதுரை, சென்னை மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்த நகரத்தார்களும் உதவி செய்துள்ளனர். மேலும் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என ஒரு குடும்பத்திற்கு 4 கிலோ காய்கறிகள் வீதம் மொத்தம் 6,000 கிலோ காய்கறிகளை வழங்கியுள்ளனர், தெற்குப்பட்டில் வசிக்கும் சேது பாஸ்கரா குழுமத்தினர். இதற்கு அடுத்ததாக, மீண்டும் கண்டரமாணிக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 1,480 ரேசன் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கும், குடும்ப அட்டை இல்லாத ஏனைய குடும்பத்திற்கும் சேர்த்து மொத்தம் 1,800 குடும்பத்திற்கும், ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வீதம் மொத்தம் 9 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் அதனுடன் 1 கிலோ கல் உப்பு சேர்த்து வழங்கியுள்ளனர், ஆட்டோ லெக் குழுமத்தினர். இதுபோக ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் பால், தயிர், டீ தூள் பாக்கெட், சோப், முககவசம் என ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்கி மனித நேயத்தை வளர்த்து வருகின்றனர். இன்னும் எங்களுக்கு உதவ பலரும் முன்வருகின்றனர்" என்கிறார் அனைவரையும் ஒருங்கிணைத்து வரும் ஊராட்சிமன்றத் தலைவரான ராமு கனக கருப்பையா. இச்சேவைக்காக திருப்புத்தூர் சட்டமன்றத்தொகுதியின் உறுப்பினரான பெரியகருப்பன் பாராட்டு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னும் மனிதம் மரித்துப் போகவில்லை என்பதற்கு கண்டரமாணிக்கம் ஓர் முன் உதாரணம்.!!